ஆடுகால் - செங்கை ஆழியான்.

 அருளம்பலத்தார் இடிந்தே போய்விட்டார். வெளிவிறாந்தையில் இடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தபடி தூரத்தே அடிவளவில் தெரியும் கிணற்றையும் கண்முன்னால் கூட்டித்துப்புரவாக்கி வெளிப்படலை வரை விரிந்து கிடந்த முற்றத்தையும் அடங்கா கவலையோடு பார்த்தபடி நிலைக்குத்தியிருந்தார். எல்லாம் முடிந்துவிட்டன. 

மாமா என்றழைத்தபடி மருமகள் உள்ளிருந்து வந்தாள். "இந்தாங்கோ தேத்தண்ணி வந்ததில இருந்து எதுவுமே வாய் நனைக்கவில்லை. இந்த அற்ப விடயத்திற்கு போய் இப்பிடி இடிந்து போயிட்டியள். அவர் இந்த வீட்டையும் இடித்துவிட்டு மொடர்னா ஒரு அப்பஸ்ரயர் கட்டப்படம் போட்டிருக்கிறார் மாமா".

அவரின் இதயத்தில் சன்னம் பாய்ந்த மாதிரியான உணர்வு.

"இதுக்காகவா பிள்ளை என்னை கனடாவுக்கு அனுப்பி வைச்சியள்?"

"என்ன மாமா கதைக்கிறியள்?. உங்கள் கடைசி மகன் தம்பிராசா உங்களை வந்து அங்க ஒரு மாதம் தங்களுடன் இருக்குமாறு வற்புறுத்தினதால போனியள்" இப்ப நாங்கள் வற்புறுத்தி அனுப்பின மாதிரி குற்றம் சொல்லுறியள் மாமா"

"ஒரு மாதம் தான் அங்க இருந்தன் அதுக்குள்ள இவ்வளவும் செய்திட்டியள்" என்றார் விரக்தியோடு. 

"உங்களுக்காகத்தான் மாமா அவர் இதை செய்தவர். துலாக்கிணத்தில நீங்கள் அள்ளிக்குளிக்கிறதை பார்த்து விட்டு இந்த வயதில் நீங்கள் கஷ்டப்பட வேண்டாமெண்டு தான் தண்ணித்தாங்கி கட்டி பைப் பூட்டி விட்டிருக்கிறார். தேத்தண்ணியை குடியுங்கோ" நீட்டிய தம்ளரை வாங்கி காலடியில் வைத்தார். மருமகள் திரும்பிச்சென்றாள்.

அவர் விழிகள் சோகத்துடன் கிணற்றடியை பார்க்கின்றன. துலாவை தாங்கி நின்ற ஆடுகால் அங்கிருக்கவில்லை. அந்தப்பொளிகல்லு கிணற்றினையும் ஆடுகால் துலாவையும் அவரின் தகப்பனார் ஆறுமுகத்தார் இரசித்து இரசித்து கட்டுவித்தார். அப்போது அருளம்பலத்தாருக்கு வயது பத்து.

ஒருநாள் அதிகாலை அவர் பாயிலிருந்து எழுந்து வெளியில் வந்தபோது அடிவளவில் நிறைகுடம், விளக்கு என்பன தலைவாழை இலையில் வைக்கப்பட்டிருந்தன. சாணத்தில் பிள்ளையார் அறுகம்புல் தலையுடன் காட்சி தந்தார். சாஸ்திரியார் தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டிவிட்டு, அரையிலிருந்த சால்வையையை தலைப்பாகையாக கட்டிக்கொண்டு வலது கையில் பெருவிரலிற்கும் சின்ன விரலிற்குமிடையில் தென்னீர்க்கு ஒன்றை வில்வளைவாக பிடித்தபடி வளவெல்லாம் நடக்க தொடங்கினார். அப்புவும் அவருக்கு பின்னால் நடந்தார். ஓரிடத்தில் இப்போது கிணறு இருக்கின்ற இடத்தி்ல் சாஸ்திரியார் தரித்து நின்றார்.

அவர் கரத்தில் விரல்களிடையே வில்லாக பிடித்திருந்த தென்னீர்க்கு அங்குமிங்குமாக  ஏணையாடுவது போல ஆடியது.

"ஆறுமுகம் இங்கை பார் .ஈக்காடுகிறதை இங்க தான் நல்ல தண்ணியி்ருக்கு. இங்க கிணற்றை கிண்டு."

"அங்கயும் ரெண்டு மூண்டிடத்தில ஆடினது" என்றார் பத்து வயது அருளம்பலம்.

"ஓமோம் அங்க இப்படி ஆடவில்லை. இந்த இடத்தில திறமான ஊற்றிருக்குது. அதுதான் இப்பிடி ஆடுது. நம்பிக்கிண்டு ஆறுமுகம்"

தரைக்கு கீழிருக்கிற அமிர்தத்தை ஈர்க்கின் மூலம் சாஸ்திரியார் எப்படி கண்டறிந்தார் என்பது அவருக்கு இப்பவும் புரியவில்லை.

அதோ கிணறு வெட்டுதல் தொடங்கி விட்டது. சாஸ்திரியார் காட்டிய மையத்தில் தறி அடித்து அதில் ஒரு இழைக்கயிற்றினை கட்டிவிட்டு, கயிற்றினை கட்டியபடி சின்னவன் கனகனை பார்த்தான். கனகன் அப்புவை பார்த்தான்.

"பதின்மூண்டு முழம் கிண்டினால் தான் தண்ணி வரும்". என்கிறார் அப்பு. அப்ப ஏழு முழத்தில கிணத்தின்ர சுற்று இருக்க வேணும். பொளிகல்லுக்கட்டு. விட்டுவீதியா நின்று கட்ட பதினான்கு முழத்தில் சுற்று வரையடா சின்னவா".

சின்னவன் முழங்கை அளவாக பதினான்கு தரம் இழைக்கயிற்றில் அளந்து அந்தத்தில் சுட்டி அலவாங்கினை பிணைத்துக்கொண்டான். தறியிலிருந்து இழைக்கயிறு தொய்ந்து போகாத இழுவையோடு அப்படியே ஒரு சுற்று சுற்றிவந்தான். கிணற்றின் வட்ட வடிவம் மண்ணில் கீறப்பட்டு விட்டது. கிணறு தோண்டப்படுகின்ற வேலையை அப்பு இரசனையோடு அவதானித்து வந்தார். 

நான்கு அடிவரை கபிலநிற மேல்மண்படை. அடுத்து இரண்டடிகளுக்கு பெருங்கற்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. அதன் பின்னர் மக்கி இருபதடி ஆழம் வரை கிண்டப்பட்டது. " என்ன கனகு அசுகையை காணவில்லை" என்று ஆறுமுகத்தார் கேட்கவும், சின்னவன் ஓங்கிப்போட்ட பிக்கான் கணீர் என்று ஒலி எழுப்பியது. அப்புவின் முகம் மலர்ந்தது. "சரி சரி கண்ணாடிப்பார் வந்திட்டுது இனி ஊற்றுத்தான்".

மரக்கப்பி பொருத்தி தேடாவளையக்கயிற்றின் மூலம் கிணற்றிற்குள்ளிருந்து அகழ்ந்த மண், மக்கி என்பன மேலே தூக்கி வகைவகையாக கொட்டப்பட்டன. தேடாவளையக்கயிற்றின் அந்தத்தில் மான்கொம்பு கெவர் ஒன்று பொருத்தப்பட்டது. அனலைதீவு நார்க்கடகத்திற்கு மேலதிகப்பலத்திற்கு சாக்கு அணைத்து கடக மட்டையோடு பனை ஈர்க்கினால் இறுக்க்கட்டப்பட்டது. அத்தோடு மான்கொம்பு கெவரில் கொழுவிவிடுவதற்கு வசதியாக ஒவ்வொரு நார்க்கடகத்திற்கும் மட்டக்களப்புக்கயிற்றினால் தாங்கு தூக்கி கொழுவி பொருத்தப்பட்டது.

கப்பியில் மாட்டப்பட்டிருந்த தேடாக்கயிற்றின் ஒரு அந்தததில் பிணைக்கப்பட்ட இழுதடியை பற்றி இருவர் இழுக்க கிணற்றுக்குள்ளிருந்து மக்கி நிரம்பிய கடகத்தினை கொழுவிக் காவியபடி மான் கொம்பு கெவர் மேலே வரும்.

கிணறு அகழப்பட்டு வரும் நிலையில் ஒரு நாள் பொளிகற்களுக்கான சுண்ணப்பாளங்கள் வண்டில்களில் கொண்டு வரப்பட்டு பறிக்கப்பட்டன. கல்தச்சர்களின் பொளியும் ஓசை பல நாட்களாக அந்த வளவில் எழுந்து கொண்டிருந்தது. மிகவும் நுட்பமாக அவர்கள் கிணற்று வளைவை கணக்கிட்டு பொளிகற்களை பொளிந்தனர்.

கிணற்றில் ஊற்று தென்பட்டதும் அவ்விடத்தில் குதூகலம் பொங்கியது. அப்புவின் முகம் பிரகாசமாகியது. பொங்கலிட்டு ஊற்றுக்கங்கையை வரவேற்றமை மறக்கக்கூடியதன்று. பொளிகற்களை பொருத்தி கிணறு கட்டிமுடிக்கப்பட்டது. மிதிகல், சலவைக்கல், தொட்டி என்பனவற்றுடன் கிணற்றுக்கட்டும் பூர்த்தியாக்கப்பட்டன.

அடுத்தபணியை அப்பு தொடங்கியிருந்தார். ஆடுகால் அமைக்கின்ற பணி. அருளம்பலத்தாரின் நெஞ்சு கனக்கின்றது. இன்று அந்த ஆடுகாலில்லை. துலாவைத் தாங்கி நின்ற ஆடுகால் பூவரசமரங்கள் அனைத்தும் தறித்து வீழ்த்தப்பட்டுள்ளன. அவ்விடத்தில் தண்ணீர்த்தாங்கி ஒன்று எழுப்ப பட்டிருந்தது. "உங்களுக்காக தான் மாமா" என்கிறாள் மருமகள். அந்த ஆடுகால் அப்புவின் கரம்பட்ட பூவரசமரங்களை கொண்டது. அதில் அப்புவின் மூச்சும் உழைப்புமிருக்கிறது.  அப்பு கிராமம் முழுவதும் அலைந்து வேலிவேலியாக தெரிந்தெடுத்து வெட்டி எடுத்து வந்த முற்றி முறுகிய பத்து முழுப்பூவரசந்தடிகள் ஆடுகாலிற்காக அவரால் நாட்டப்பட்டன.

" கனகு ஆடுகால் தடிகள் வளர்ந்து பலம் பெறும் வரை ஐந்தாறு காட்டுத்தடிகளையும் நட்டுவிடு"

அப்பு சொன்னவாறு ஆடுகாலமைந்தது. ஐந்தடி இடைவெளியில் இரண்டு வரிசையில் ஆடுகால் மரங்களும் பூவரசந்தடிகளும் நாட்டப்பட்டன. துலா அச்சுலக்கையை தாங்குகின்ற பக்கமரங்கள் தெரிந்தெடுத்து இழைக்கயிற்றினால் வெகு நேர்த்தியாக கட்டப்பட்டன. ஒவ்வொரு நாளும் இழுவாளியால் கிணற்றிலிருந்து நீரள்ளி ஆடுகால் தடிகளுக்கு அப்பு மறக்காமல் நீர் வார்த்தார். பூவரசந்தடிகள் துளிர்த்த போது அவர் பிரகாசமானார்.

இன்று அவையில்லை. ஆடுகால் இருந்தவிடத்தில் கொங்கிரீட் தூண்கள் எழுந்து நீர்த்தாங்கியொன்றினை காவி நிற்கின்றன. ஆடுகால் பூவரசமரங்கள் தறிக்கப்பட்டு ஓர் ஒதுக்கில் குவிக்கப்பட்டிருந்தன. ஐம்பது வருடங்களுக்கு மேல் அவர்களுக்காக உழைத்த துலா கழற்றப்பட்டு முற்றத்து வெறுந்தரையில் புரட்டிவிடப்பட்டிருந்தது. அச்சுலக்கை கழற்றப்பட்டு ஒரு பக்கத்தில் கிடக்க, துலா பரிதாபமாக கிடந்தது. அவருடைய அப்புவை தூக்கி வளர்த்தியதான பிரமை அவருக்கு ஏற்பட்டது. அந்த துலாவிற்காக அப்பு எடுத்த கரிசனை இப்போதும் நிழலாடுகின்றது.

பனந்துலாவினை போடுவதாக முடிவாகியதும் அரியாலை வேலுப்பிள்ளை அழைத்து வரப்பட்டார். அக்கிராமத்தில் அவர் கை வண்ணத்தில் உருவாக்கப்பட்ட துலாக்கள் தாம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கின்றன. அரியாலை வேலுப்பிள்ளையின் துலா என்பதை அத்துலாவின் எழுதகத்தில் இருந்து எவரும் புரிந்து கொள்வர். துலாவின் நுனியில் சுற்றப்படும் துலாக்கயிறு நழுவாதிருப்பதற்காக சீவப்பட்டிருக்கும் சிற்ப பொதிகை தான் எழுதகம். துலாவின் எழுதகத்தினை பார்த்து அத்துலாவின் சிற்பி வசாவிளானை சேர்ந்தவரா, நல்லூர் அரசடியை சேர்ந்தவரா, கைதடியை சேரந்தவரா என்பதை இனங்காண அப்புவால் முடியும்.

வேலுப்பிள்ளையை அழைத்துக்கொண்டு தனது பனந்தோப்புக்கு அப்பு போனார். அருளம்பலத்தாரும் கூடவே போனார். அவர்களிடம் இருந்து பல விடயங்களை கற்கலாம் என்பது அவரின் நம்பிக்கை. துலாவிற்கான பனை தெரிவுப்படலம் ஆரம்பமாகியது.

"இது எப்படி வேலுப்பிள்ளை?". 

"இது முரவைப்பனை. அடி ஒடுங்கி உச்சி பருத்திருக்குது பார்த்தியளே?". முரவைப்பனைகள் வலிமை குறைந்தவை. துலாவிற்கு சரிவரா.

"அப்ப இது?" 

"நீங்கள் என்னை சோதிச்சு பார்க்கிறியள் போல" அடியும் தலையும் ஒரே தடிப்பில் இருக்கிற செங்காலிப்பனையை ஆராவது துலாவிற்கு எடுப்பினமே?. துலாவிற்கு வால்கால் பனைதான் ஏற்றது.  பாருங்கோ இந்த பனையை." 

வேலுப்பிள்ளை ஒரு பனையை சுட்டிக்காட்டினார். "அடிப்பனையின் சுற்று ஒன்றரை அடிக்கு மேலும் அப்படியே உச்சிவரை சீராக ஒடுங்கியும் இருக்கிற இந்த வால்கால் பனைதான் ஏற்றது."

அந்த வால்கால் பனை தறிக்கப்பட்டு வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. துலா வடிவம் பெறத்தொடங்கியது. எட்டு இரும்பு ஆப்புகளும், இரண்டு மர ஆப்புகளின் துணையுடன் வெகு அற்புதமாக அந்தப்பனை இருசம பாதிகளாக பிளக்கப்பட்டது. வேலுப்பிள்ளை ஓயாது பேசிக்கொண்டு வேலை செய்தார்.

"பனையை இரு சம பாதிகளாக பிளப்பதற்கு பயிற்சி தேவை தம்பி கொஞ்சம் பிழைச்சாலும் துலாவின் சமநிலையும் இறுக்கமும் பிழைச்சுப்போகும்."

"எப்பிடி துலாவின் நீளம் கணிப்பியள்?"

வேலுப்பிள்ளை சிரித்தார். "கிணற்றின் ஆழத்தை பொறுத்து நிச்சயிப்பம்". "உங்கட கிணத்திற்கு பதினான்கு முழ துலா தேவை. அச்சுலக்கைக்கு அடிப்பாகம் ஐந்தரை முழம் இருக்கும். அச்சுலக்கைக்கு இந்தப்பக்கம் உச்சப்பகுதி எட்டரை முழமாக அமையும் கண்டியோ தம்பி"

பிளக்கப்பட்ட பனைமரம் வாச்சியை கொண்டு சீவப்பட்டது. கால்களை அகட்டி அவற்றின் இடையில் பனைமரப்பாதியை வைத்து வாச்சியால் சீவிய போது  அருளம்பலத்தாருக்கு கூச்சமாக இருந்தத. எங்கே வாச்சி தவறி வேலுப்பிள்ளையின் காலை காயப்படுத்தி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. இரண்டு பாதியும் சீவி முடிக்கும் வரை அப்படி எதுவும் நடந்து விடவில்லை. இடையிடையே கோடரியும் உளியும் பயன்படுத்தப்பட்டன. அச்சுலக்கை பொருத்தப்பட்டு இரண்டு பாதிகளையும் இணைத்து நெம்புகள் இறுக்கி கடையாணிகள் இறுக்கப்பட்டன.

துலா வேலை முற்றுப்பெற்றது. அப்பு கடைசியாக பார்த்தார். வேலுப்பிள்ளை கீறாணியை எடுத்து அடித்துலாவில் இருந்து நுனித்துலாவரை இரண்டு பாதிகளும் பொருந்தியவிடத்தில் கீறியிழுத்துச்சென்றார். கீறாணி பிளவுப்பொருத்துள் சிறிதளவும் உள்ளிறங்கவில்லை. 

"நல்ல திறமான வேலைப்பாடு வேலுப்பிள்ளை" 

அப்புவால் மெச்சப்பட்ட அந்த துலா இன்று முற்றத்தில் மண்ணில் கிடக்கிறது. அவரின் இதயம் கனத்தது. "மாமா இதென்ன தேத்தண்ணி குடிக்காமல் ஆறிப்ப்போய்கிடக்குது. வேறு ஊத்தி வாறன்" என்றபடி குனிந்து டம்ளரை எடுத்துக மருமகள்.

"வேண்டாம் பிள்ளை மனசு சரியில்லை"

"போய் குளிச்சிட்டு வாருங்கோ மாமா"

"எங்கை?"

"பாத்ரூமில தான்"

அவர் மருமகளை ஏறிட்டுப்பார்த்தார். துலாவை இறக்கி வாளியில் நீர் அள்ளி தலையில் ஊற்றுகிற சுகம் எதிலும் வராது. அரையில் துவாயோடு அரைக்கிணற்று நீரை மொண்டு குளிப்பது போல வருமா?. 

முற்றத்தில் துலா கழற்றிப் போடப்பட்டிருந்தது. இப்படியே கிடந்தால் நிலக்கறையான ஏறிப்படர்ந்து சிதைந்து போய் விடும். அரிகற்களில் அடுக்கி தூக்கி வைக்கவாவது வேண்டும். அவர் எழுந்து சென்று அரிகற்களை தூக்கி வந்து முற்றத்தில் போட்டார்.

"என்ன மாமா செய்யிறியள்? அதைத்தான் விலைக்கு வித்திட்டம்."

அப்புவை விற்றது மாதிரி உணர்ந்தார். "என்னது?".

வெளிக்கதவை தள்ளித்திறந்து கொண்டு மாணிக்கன் வந்தான்.

"தங்கச்சி இப்ப ஆர் பழந்துலாவை வாங்கினம். முதலில் ஓமெண்ட சதாசிவத்தார் இப்ப வேண்டாமாம். பம் வச்சு தண்ணித்தாங்கி கட்டப்போகினமாம். விறகாக கொத்திப்போட்டு விடுறன் தங்கச்சி". 

மாணிக்கனின் கன்னத்தில் அருளம்பலத்தாரின் அறை மின்னல் வேகத்தில் படிந்தது. "போடா இங்க இருந்து நிண்டியெண்டால் கொலை விழும்"

அவர் அப்படியே தளர்ந்து போய் சாய்வு நாற்காலியில் அமர்ந்து சாய்ந்து கொண்டார். கண்கள் கலங்கி நீரை கொப்புளிக்க தொடங்கின. எப்போது அயர்ந்தாரென்பதோ எப்படி விழிப்பு வந்ததென்பதோ அவருக்கு தெரியவில்லை. கண்களை விழித்த போது மூத்தவன் கலங்கிய விழிகளுடன் அவர் முன் நின்றிருந்தான். முற்றத்து மண்ணில் கிடந்த துலா அரிகற்களில் தூக்கி வைக்கப்பட்டிருந்தது.

"மன்னியுங்கோ ஐயா. உங்களை புரியாமல் உங்களுக்கு நன்மை செய்வதாக நினைச்சு பிழை விட்டிட்டன். இனி அப்படி நடக்க மாட்டம். நீங்கள் வாழ்ந்த வீட்டை அப்படியே வச்சிருப்பன். பரம்பரை பரம்பரையா வச்சிருக்க செய்வன். எழுந்து வாருங்கோ"

அவர் தன் முகத்தினை அழுத்தி துடைத்துக்கொண்டார்.

கருத்துகள்